Wednesday, January 6, 2016

நர்ஸ் எனும் பரிதாப ஜீவன்-தி ஹிந்து நாளேடு செய்தி வெளியிடு
மத்திய அரசோட ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை வந்ததும், நமக்கு எவ்வளவு சம்பளம் ஏறும்னு தமிழக அரசு ஊழியர்கள் கணக்குப் பாத்திருப்பாங்களோ இல்லியோ, பக்கத்து வீட்டுக்காரங்க கணக்குப் பாத்திருப்பாங்க. ஆனா, நான் எம்பிக்களோட சம்பளம் எவ்வளவு ஏறும்னு கணக்குப் பாத்தேன். ஏன்னா, முன்னாடி ஒரு தடவ இப்படித்தான் சம்பள கமிஷன் அறிக்கை வந்தப்ப, சத்தமே இல்லாம எம்பிக்களோட சம்பளத்தைக் கூட்டிட்டாங்க. பின்னாடியே எம்எல்ஏ சம்பளமும் கூடிருச்சி.
 
இந்தவாட்டியும் அதாம் நடந்திருக்கு. ஏழாவது சம்பள கமிஷன் அறிக்கை அமலுக்கு வருதோ இல்லியோ எம்பிக்களோட சம்பளத்தை ரெண்டு மடங்கு கூட்டப்போறாங்களாம். பாவம், டெல்லி ‘ஆயா’உணவகத்துல எட்டணா இட்லியும், ஒத்த ரூவா சப்பாத்தியும் சாப்புடுற ஏழைங்க பாருங்க. படியோட சேத்து மாசம் 1.40 லட்சம் ரூவா போதாதாம். போன வருஷம் மட்டும் லோக் சபா, ராஜ்ய சபான்னு மொத்தம் 417.21 கோடி ரூவா சம்பளமா (கமிஷன் சேர்க்கலை மக்களே) வாங்கிருக்காங்க. இந்த வருஷம் அது 840 கோடியாகப் போகுது!
 
ஒவ்வொரு வீட்லயும் பச்சப் புள்ளைகளுக்குத்தாம் முதல்ல பசியாத்துவோம். ஆனா, நம்ம நாட்ல, பச்சப் புள்ளைகளுக்குச் சத்துணவு குடுக்கதுக்குக் காசில்லைன்னு சொல்லி, வெட்கமே இல்லாம உலக வங்கிகிட்ட கடன் வாங்குதோம். ஆனா, நாட்டோட மிகப்பெரிய முதியோர் இல்லமான நாடாளுமன்றப் பெருசுகளுக்கு முழுசா 840 கோடி ரூவா குடுக்கப்போறோம்.
 
முன்னாள் கொத்தடிமை!
ஏன்டா உனக்கு வயித்தெரிச்சல்னு கேட்கிறீங்களா? ஏன்னா, நானெல்லாம் கொத்தடிமையா இருந்து மீண்ட பய. காலேஜ் படிச்சப்ப அரியர் விஷயம் அப்பாக்குத் தெரிஞ்சிருமோன்னு ஃபைனல் செமஸ்டர் ரிசல்ட் வர முன்னாடியே, ஒரு பத்திரிகையில அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வாங்கிட்டேன்.
ஆரம்பச் சம்பளம் ஆயிரத்து ஐந்நூறு. முத ஆறு மாசத்துக்கு வார லீவு கெடையாது. கன்ஃபார்ம் ஆகத்தண்டியும் (5 வருஷத்துக்கு) பிஎஃப், இ.எஸ்.ஐ.யும் கெடையாது. இவ்வளவு ஏன், அட்டென்டென்ஸ்ல பேரே கிடையாது.
சம்பளத்த வவுச்சராதாம் தருவாங்க. அதுல, என் பேரு மட்டும்தான் கரெக்ட்ரா இருக்கும். மிச்சதெல்லாம் பொய். பார்சல் அனுப்பிய செலவு ரூ.1,500 மட்டும், ஆபீஸை கிளீன் பண்ணிய வகைக்கு ரூ.1,500 மட்டும் என்று ஒவ்வொரு மாசமும் எதையாவது எழுதிச் சம்பளமா தருவாங்க. இந்த லட்சணத்துல 25 வருஷம் சர்வீஸ் முடிச்சிருந்த சீனியர் கொத்தடிமை ஒண்ணு, எம் மேல பொறாமைப்படும். ‘நாங்கல்லாம் வேலைக்குச் சேரும்போது மாசம் வெறும் 110 ரூபாதாம் சம்பளம். உனக்கு 1,500 ரூவாயா’ன்னு. இந்தியாவுல இன்னும் பத்திரிகை நிறுவனங்கள்லயே சிலது இப்படித்தான் இருக்குதுன்னா… மத்த துறைகள் எப்படி இருக்கும்?
 
 
நவீன கொத்தடிமைகள்
என் கதையாவது 10 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது. ஆனா, பெரிய பெரிய படிப்பெல்லாம் முடிச்சிட்டு, இப்பவும் நிறைய கொத்தடிமைக இருக்காங்க. என் வீட்டுப் பக்கத்துல இருக்கிற இன்ஜினீயரிங் காலேஜ் புரபசரோட சம்பளம் வெறும் ஏழாயிரம். அதையும் மாசாமாசம் தராம, தோதுப்படும்போதுதாம் குடுப்பாங்களாம். தொடர்ந்து பத்து மாசம் சம்பளம் தராட்டியும் அவர் கோச்சுக்க முடியாது. தலைவனோட ஒரிஜினல் சர்ட்டிபிகேட் பூராத்தையும் வாங்கி வெச்சுக்கிட்டுத்தான வேல குடுத்திருக்காங்க.
ஏன்யா அந்த காலேஜ்ல வேல பாக்குறன்னு கொஞ்சம் அசிங்கமா கேட்டேன். “மத்த காலேஜோட ஒப்பிட்டா, இது ரொம்ப நல்ல காலேஜ் சார். ஸ்டூடன்ட்ஸ்கிட்ட ஃபீஸ் பாக்கிய வசூலிச்சுக் குடுத்தாதான் சம்பளம்னு சொல்ற காலேஜ்லாம் இருக்கு. அந்த வாத்தியார்க பூராம் கந்துவட்டிக்காரன் மாதிரி ஸ்டூடன்ட்ஸைத் தொரத்திக்கிட்டுத் திரிதாங்க தெரியுமா?”ன்னாரு.
‘‘அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களோட நிலமை மட்டும் என்ன வாழுது?’’ன்னு கேட்பாரு இன்னொரு தோஸ்து.
‘‘பொண்டாட்டியில ஆரம்பிச்சி மாமனார் வீட்ல மச்சினிச்சி வரைக்கும் எங்கள கவுரத குறைவாத்தான் நடத்துறாங்க. அரசாங்கம் அவங்களுக்கு அள்ளிக்குடுக்குற சம்பளம் அப்பிடி’’ம்பாரு அவரு.
தனியார் ஸ்கூல்களப் பத்திச் சொல்லவே வேணாம். ஒவ்வொரு பிள்ளைகிட்டயும் வெறும் ஒரு லட்சம், ரெண்டு லட்சம் ஃபீஸ் வாங்குற ‘கல்வி வள்ளல்கள்’, வாத்தியார்களுக்கு நாலாயிரம், ஐயாயிரம்னு சம்பளத்தை ‘அள்ளிக்’ குடுக்கிறாங்க.
 

 
நர்ஸ் எனும் பரிதாப ஜீவன்
 
கரென்ட் ஷாக்கடிச்சவனைக் காப்பாத்தப்போனவன் கதை மாதிரி, ஒரு நாட்டுக்குள்ள எந்தப் புது வியாதி வந்தாலும், முதல்ல அடிபடுறது நர்ஸுகதாம். ஒரு நர்ஸ் லீவு போட்டுட்டா, டூட்டி முடிச்சிக் கௌம்புற இன்னொரு பிள்ளைய அப்படியே நிப்பாட்டி டூட்டிய கன்டினியூ பண்ணச் சொல்லுவாங்க.
 
மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமா பரீட்சை வெச்சி வேலைக்கு எடுக்கிற அரசாங்க நர்ஸுகளுக்கே 7 ஆயிரம்தாம் ஆரம்பச் சம்பளம். லட்சம் கோடிக்குப் பட்ஜெட் போடுற அரசாங்கமே இப்படித்தாம் நடத்துதுன்னா ‘காசேதான் கடவுளடா’ன்னு தொழில் நடத்துற தனியார் மருத்துவமனைங்க என்ன பண்ணும்னு விவரிக்கணுமா?
 
பஞ்சு மில்லு, தீப்பெட்டி ஆபீஸ், பீடிக் கடையில வேலை பாக்கவங்ககூடச் சம்பளம் கம்மி, போனஸ் தரலன்னு தொழிலாளர் துறை அதிகாரிககிட்ட புகார்கூடச் சொல்லலாம். ஆனா, அரசாங்க அடிமைகளோ, தனியார் துறை அடிமைகளோ புகார் பண்ண முடியாது. ஏன்னா, அவங்க எல்லாம் தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ் வர மாட்டாங்க.
 
ஊழல் படி
அரசு ஊழியர்களுக்கு மட்டும்தாம் சம்பள கமிஷனை அமல்படுத்துறாங்க. அங்கேயும்கூட உயரதிகாரிகளுக்குத்தான் சம்பளம் கூடுதே தவிர, அடிமட்ட ஊழியர்களுக்கு இல்ல. நம்ம நாட்ல தங்களோட சம்பளத்தைத் தாங்களே தீர்மானிச்சிக்கிற அதிகாரம் ரெண்டு பேருக்குத்தாம் இருக்கு. ஒண்ணு, எம்பி. இன்னொண்ணு, எம்எல்ஏக்கள்.
இவங்கள யாராச்சும் கேள்வி கேட்க முடியுமா?
 
- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

No comments :

Post a Comment