சென்னை,
சென்னை மருத்துவக்கல்லூரி
மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவகல்லூரிகளில் பயிற்சி செவிலியர்கள் நேற்று
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் சுகாதார பணிகள் பாதிப்படைந்தன.
உள்ளிருப்பு போராட்டம்
அரசு மருத்துவமனைகளில் தனியார்
செவிலியர் கல்லூரி மற்றும் பள்ளிகளில் படித்த செவிலியர்களை பணி நியமனம்
செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி சென்னை மருத்துவக்கல்லூரியில் செவிலியர்கள்
(பயிற்சி) நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். காலை 7 மணி முதல் அவர்கள் வேலைக்கு
செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காலை 10 மணிக்கு மருத்துவக்கல்லூரி ‘டீன்’ வே.கனகசபை செவிலியர்களை
சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடம் பேச்சுவார்த்தை நடந்தது. தமிழக அரசிடம் செவிலியர்கள்
கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக தெரிவித்து பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று
மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
சுகாதார பணிகள்
இதனையடுத்து செவிலியர்கள்
போராட்டத்தை கைவிட்டு, மதியத்திற்கு
பின்னர் பணிக்கு திரும்பினர். இந்த போராட்டத்தில் சென்னை மருத்துவக்கல்லூரியில் 3½ வருடம் பட்டயபடிப்பு படிக்கும் 800 செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
இதே போன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியிலும் 300 பயிற்சி செவிலியர்கள் நேற்று
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செவிலியர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம்
அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்துதல், டாக்டர் பரிந்துரைத்த மருந்து, மாத்திரைகள் கொடுத்தல் உள்ளிட்ட
பல்வேறு சுகாதார பணிகள் பாதிப்படைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
செவிலியர்கள் விளக்கம்
இது குறித்து பயிற்சி
செவிலியர்கள் கூறியதாவது:–
தனியார் பள்ளி மற்றும்
கல்லூரிகளில் படிக்கும் செவிலியர்களை தேர்வு மூலம் அரசு மருத்துவமனையில் பணி
நியமனம் செய்வதன் மூலம் எங்களுக்குரிய வேலை வாய்ப்புகள் மிகவும் குறைந்துவிடும்.
அரசு செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் செவிலியர்கள் பெரும்பாலானவர்கள்
வறுமை கோட்டிற்கு கீழே உள்ள ஏழைகள்.
தனியார் பள்ளி மற்றும்
கல்லூரிகளில் படிக்கும் செவிலியர்களோடு ஒப்பிடும்போது நாங்கள் அதிக பாடம்
கவனிப்பதை விடவும், அதிக மணி
நேரம் நாங்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றோம். ஆகவே தனியார் பள்ளி மற்றும்
கல்லூரிகளில் படிக்கும் செவிலியர்களை தேர்வு மூலம் எடுப்பதற்கான ஆணையை அரசு ரத்து
செய்யவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments :
Post a Comment