Saturday, December 14, 2013

அரசு மருத்துவமனையை மேம்படுத்த 19 அம்ச திட்டம்: ஐகோர்ட் நோட்டீஸ்



மதுரை:"மதுரை அரசு மருத்துவமனையை மேம்படுத்த, 19 அம்ச திட்டத்தை நிறைவேற்றக் கோரிய வழக்கில், சுகாதார செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப,' ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை ஆனந்த்ராஜ் தாக்கல் செய்த பொது நல மனு: அரசு மருத்துவமனை அடிப்படை வசதிகள் மற்றும் பராமரிப்பு மோசமாக உள்ளன. 

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், மருத்துவமனை தகவல் அலுவலரிடம் விபரங்கள் பெற்றேன். 2005 ல் 1612 நோயாளிகள், 2012 ல் 5687 பேர், 2013 ஜூலை வரை 2851 நோயாளிகள் இறந்துள்ளனர். 2013 ஜூலை வரை பிரசவத்திற்கு 12 ஆயிரம் கர்ப்பிணிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர்; 1108 குழந்தைகள் இறந்துள்ளனர். 


இங்கு உயிர்காக்கும் மருந்துகளை போதிய அளவு இருப்பு வைக்க வேண்டும். அண்ணா பஸ் ஸ்டாண்டில் விரிவுபடுத்தப்பட்ட அரசு மருத்துவமனையில் திரவ ஆக்ஸிஜன், எக்ஸ்ரே இயந்திரம் பொருத்த வேண்டும்.மருத்துவமனைக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்த வேண்டும். 

புகார் பெட்டிகள் வைக்க வேண்டும். பிரசவத்தின் போது கர்ப்பிணிகள், குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும். புரோக்கர்கள், சமூகவிரோதிகள் நடவடிக்கைளை கட்டுப்படுத்த வேண்டும். காலியான டாக்டர்கள், நர்சுகள் மற்றும் இதர பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தல் உட்பட, 19 அம்ச திட்டத்தை வலியுறுத்தி சுகாதார முதன்மைச் செயலாளர், மருத்துவமனை டீன், மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்

.நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்தியநாதன் பெஞ்ச் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் அழகுமணி ஆஜரானார். சுகாதார முதன்மைச் செயலாளர், டீனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜன., 10 க்கு தள்ளிவைத்தனர்.