Tuesday, December 24, 2013

"108' ஊழியர்களுக்கு "1008' பிரச்னை- தொகுபூதிய செவிலியர்களுக்கு ?








மதுரை: ஜன., 8 இரவு 8 மணி முதல் ஜன., 9 இரவு 8 மணி வரை, தமிழகத்தில் ஆம்புலன்ஸ்கள் ஊழியர்கள், ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

மதுரையில் நடந்த, ஆம்புலன்ஸ் ஊழியர் சங்க கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் செந்தில்குமார், அமைப்பு செயலாளர் சிவக்குமார் கூறியதாவது: "108' ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில், வாகனம், மருத்துவ உபகரணங்கள், மருந்து, தொழிலாளர்களின் சம்பளத்தை, அரசு ஏற்றுக் கொள்கிறது; ஆனால் நிர்வாகம், தனியார் நிறுவனத்திடம் உள்ளது. டிரைவர், அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் "கால் சென்டர்' ஊழியர்கள் என, 3000 பேர் பணி செய்தாலும், தொழிலாளர் சட்டம் பின்பற்றப்படுவதில்லை.
மேலும், 12 மணி நேர பணி, கூடுதல் பணி நேரத்திற்கு தனியாக சம்பளம் தருவதில்லை; 12 மணி நேரத்திற்கு பிறகும், யாராவது அழைத்தால், தொடர்ந்து பணியாற்றச் சொல்கின்றனர். ஐந்து ஆண்டுக்கு முன், பணியில் சேர்ந்தவர்களுக்கும், புதிதாக சேர்பவர்களுக்கும் ஒரே சம்பளம் வழங்கப்படுகிறது. அகவிலைப்படியின்றி மாதம், 6900 முதல் 7900 ரூபாய்வரை வழங்கப்படுகிறது.
"போனஸ்' இல்லை. குறைந்தபட்ச சம்பளத்தில், அடிக்கடி மாற்றம் செய்வதால், பணி செய்ய முடியவில்லை. பணிச்சுமையால், 200பேர் வெளியேறி விட்டனர். அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டதால், ஆரம்ப சுகாதார மையத்தில் இருந்து, அரசு மருத்துவமனைக்கு, எங்கள் சேவையை எதிர்பார்க்கின்றனர். இதனால், விபத்தில் அடிபட்டவர்களை, உடனடியாக கொண்டுவர முடியவில்லை. அரசு ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச., 27ல், நாமக்கல்; டிச., 31ல் திருவண்ணாமலை; ஜன.,4ல், மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அடுத்தகட்டமாக, ஜன., 8 இரவு 8 மணி முதல், ஜன.,9 இரவு 8 மணி வரை, தமிழகத்தில் அனைத்து ஊழியர்களும், ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம், என்று கூறினர்.