Sunday, November 24, 2013

அரசு டாக்டர், நர்ஸ்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஸ்டிரைக்






பிரசவத்தின்போது குழந்தை இறந்தது தொடர்பாக திருவள்ளூர் ஜிஹெச்சில் டாக்டர், நர்ஸ் உள்பட 3 பேரை கலெக்டர் சஸ்பெண்ட் செய்தார். இதை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம் முழுவதும்    அரசு டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருவள்ளூரை அடுத்த அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் மனைவி தமிழ்செல்வி (24) கடந்த 13ம் தேதி பிரசவத்திற்காக திருவள்ளூர் ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்டார். தமிழ்செல்விக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. இதில் குழந்தை இறந்துவிட்டது.

குழந்தை உடலில் காயம் இருந்ததாக கூறப்படுகிறது. டாக்டர், நர்ஸ்கள் கவனக்குறைவால் குழந்தை இறந்ததாக கூறி தமிழ்செல்வி உறவினர்கள், கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பிரசவத்தின் போது பணியில் இருந்த டாக்டர், நர்ஸ் மற்றும் உதவியாளரை திருவள்ளூர் அரசு மருத்துவமனை இணை இயக்குநர் இளங்கோ பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து நேற்று கலெக்டர் வீரராகவராவ் குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக ஜிஹெச் டாக்டர் சூரிய பிரபாவதி, நர்ஸ் வள்ளி, உதவியாளர் சம்பத் அம்மாள் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூரில் அரசு மருத்துவமனையில் இன்று காலை பணிக்கு வந்த டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் திரண்டனர். கலெக்டர் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். புறநோயாளிகள் சிகிச்சை பிரிவிற்கு டாக்டர்கள் யாரும் சிகிச்சையளிக்க போகவில்லை.

இதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். உள்நோயாளிகளுக்கு மருத்துவமனை இணை இயக்குநர் பிரபாகரன் சிகிச்சையளித்தார். இந்த சம்பவத்தால் மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பரபரப்பு ஏற்பட்டது



தகவலறிந்ததும் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அபிராமி, தாசில்தார் சுப்பிரமணி ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தால்தான் கலைந்து செல்வோம் என்றனர்.



இதையடுத்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சந்திரநாதனை போனில் தொடர்பு கொண்டு பேசினர். அதன்பிறகு சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இதன் காரணமாக போராட்டத்தை கைவிட்டு டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் மாலை 5 மணிக்கு பணிக்கு திரும்பினர்.