Sunday, August 30, 2015

திருச்சி கூட்டம்-பணி நிரந்தரம் ஒன்றே குறிக்கோள் -2015 ஆண்டுக்குள்-கோரிக்கை அட்டை-தொடர் உண்ணாவிரதம்-MCI-நீதி மன்றத்தில் வழக்கு

 

தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்

 
 

 
 
 
 
முன்னுரை: கடந்த ஏழு ஆண்டுகளாக தொகுபூதியத்தில் பணி புரியும் தொகுப்பூதிய செவிலியர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பணி நிரந்தரதிற்காக அரசிடம் பல வழிகளில் மன்றாடி வருகிறோம் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

 

ஆனால் எதிர்பாரத விதமாக நமது மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் மற்றும் சுகாதார துறை உயர்அதிகாரிகள் போன்றோர் நமது கோரிக்கை நியாமானது என்று ஏற்று கொண்டாலும் கூட தங்கள் முயற்சியினையும் தாண்டி நிதித்துறையில் உள்ள சிக்கலால் தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதில் சிக்கல் நிலவிவருகிறது.

 

தொகுப்பூதிய செவிலியர்களுக்காக பணி நிரந்தரதிற்காக நமது சுகாதாரதுறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும், எத்தனையோ பணி நிரந்தரம் சமந்தமான கோப்புகளை நிதி துறைக்கு அனுப்பி வைத்தாலும் அது விழலுக்கு இரைத்த நீராய் வீணாய் போய்விட்டது.

 

இந்த சூழலில் தான் நாம் தமிழக மக்களுகாக எத்தனையோ எண்ணற்ற நல்வாழ்வு திட்டங்களை தீட்டி வரும் நமது தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கவனத்தை நேரிடையாக ஈர்த்து பெண்களாகிய செவிலியர்களின் வாழ்வில் பணி நிரந்தரம் என்ற ஒளி விளக்கை மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் ஏற்றி வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுடைய கவனத்தை நேரிடையாக ஈர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே மேற்கொள்ள போகும் முயற்சிகள் தான் நாம் மேற்கொள்ள இருப்பவை.

 

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கவனத்திற்கு நமது தொகுப்பூதிய செவிலியர்களின் கூக்குரல்கள், கண்ணீர்கள் முறையாக கொண்டு சேர்க்கபட வில்லை என்பதே உண்மை.

 

உண்மையில் கொண்டு சேர்த்து இருந்தால் எப்போதோ அனைவரும் பணி நிரந்தரம் பெற்று இருப்போம்.

 

இப்பொழுதும் சரி எப்பொழுதும் சரி அரசுக்கு எதிராகவோ அல்லது அரசுக்கு அவபெயர் பெற்று தரும் செயல்களில் ஈடுபடும் எண்ணமோ நோக்கமோ துளிகூட எந்த தொகுப்பூதிய செவிலியருக்கும் கிடையாது.

சேவை செய்வது எங்கள் பணி அதனை செம்மையாக செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.


 

எங்கள் கோரிக்கையில் எதாவது ஒன்று நீங்கள் கேட்பது தவறு என்று ஒரு காரணத்தை கூறி சுட்டி காட்டினாலும் கூட ஒட்டு மொத்த போராட்டத்தையும் கைவிட்டுவிட்டு இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தொகுபூதியத்தில் பணி ஆற்ற தயாராக உள்ளோம்.

 

நிதி துறையில் நிதி இல்லை என்று கூறுவது ஏற்றுகொள்ளவே முடியவில்லை, சரி அப்படியே என்றாலும் 2011 இருந்து 2015 வரையா நிதி இல்லை. எப்பொழுது தான் நிதி வரும், எங்களுக்கு நீதி வரும். விடையை தேடி அலைகிறோமே தவிர வினையை தேடி அல்ல.

மூன்று வருடம் ஒரு பணி இடம் தொடர்ந்து இருந்தாலே அந்த இடத்தை நிரந்தர இடமாக மாற்றம் செய்யலாம் என்ற விதி இருக்கும் போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 20 ஆண்டுகளாக செவிலிய பணி இடங்களை தொபூதியத்தில் தொடர்ந்து வைத்து இருப்தற்கான காரணம் என்ன ? நிதி இல்லையா அல்லது செவிலியர்களுக்கு நீதி வழங்க மனமில்லையா.

 


திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின் பொதுகுழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து எராளமான தொகுப்பூதிய மற்றும் நிரந்தர செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

 

திருச்சி கூட்டத்தில் விவாதிக்கபட்டவை
 
 

கூட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட தலைவரான திரு.மோகன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் தொகுப்பூதிய செவிலியர்கள் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஆதரவு என்று உண்டு மேலும் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரதிற்காக எடுக்கும் முயற்சிகளில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் தோளோடுதோள் சேர்த்து நிற்கும் என்று தெரிவித்தார்.

 


நமது கோரிக்கையை ஏற்று கூட்டத்திற்கு வந்து இருந்த திருச்சி மாவட்ட வழக்கரினர் சங்கத்தின் தலைவரான திரு. மார்டின் ஐயா அவர்களும் நமது கோரிக்கை நியமானது, அதற்கு தேவைபட்டால் சட்டரீதியான உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் கண்டிப்பான முறையில் செய்து தரப்படும் என தெரிவித்தார்.

 

 


கூட்டத்தில் கலந்து கொண்ட சமூக ஆர்வலரான திரு. ஆனந்த்ராஜ் அவர்கள் செவிலியர் பற்றாகுறையால் மருத்தவமனைகளில் நோயாளிகள் பாதிக்கபடுவதை ஒரு பொழுதும் ஏற்று கொள்ள முடியாது, எத்தனையையோ பொது நலவழக்குகள் போட்டு உள்ளோம், ஆனால் இவ்வாறு மருத்துவ கல்லுரி மருத்துவமனைகளில் இல்லாத செவிலியர்களை இத்தனை வருடமாக இருப்பதாக கணக்கு காண்பிப்பது போன்ற விஷயங்கள் அதிர்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு போலியாக கணக்கு காண்பிப்பதால் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு காலி பணி இடங்கள் இல்லை என்று கூறி அவர்களை ஏமாற்றி அவர்கள் பணி நிரந்தரத்தை தாமதபடுத்தியதோடு மட்டுமல்லாமல், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் ஏமாற்றபட்டு உள்ளனர். இதனை கண்டிப்பான முறையில் மனித உரிமை ஆணையத்திற்கு எடுத்து செல்வோம், அதோடு மட்டுமல்ல வழக்குகள் தொடுத்து இவ்வாறு போலியாக கணக்கு காண்பித்த அனைத்து நபர்களும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும், அதற்கான அத்துணை முயற்சிகளும் மேற்கொள்ளபடும் என்று உறுதி அளித்துள்ளார்.

 


நிதி நிலைமை:

உண்மையில் நம்மிடம் நன்றி சொல்லவும் காசு இல்லை, நாலு இடத்திற்கு சென்று வரவும் காசு இல்லை. வழக்கு தொடுக்கவும் காசு இல்லை. வழி செலவுக்கும் காசு இல்லை

 
 
பணி மாறுதல் கலந்தாய்வுகு கேட்ட உடன் அனுமதி அளித்த நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு நன்றி சொல்லி ஒரு போஸ்டர் அடிக்க கூட நிதி இல்லை, மற்ற சங்கங்கள் அப்படி இல்லை. இது ஆரோக்கியமான விசயமும் அல்ல

 

3000 மேற்பட்டோர் நலனுக்காக அலையும் 30 பேரும் இதுவரை தங்கள் சொந்த சம்பளத்தில் இருந்தே அனைத்து செலவுகளையும் மேற்கோள்கின்றனர். இது தவறான விசயமாகும்.அவர்களுக்கும் குடும்பம் குழந்தை என்ற அனைத்துமே உள்ளது. ஆர்ப்பாட்டம் போராட்டம் மீட்டிங் ஏன் ஒரு கூட்டத்திற்கு டீக்கு கூட இரண்டாயிரம் செலவாகிறது.

 
 
கடந்த காலத்தில் செவிலியர்கள் சிலர் பல்வேறு காரணங்களால் எதிர்பாராமல் இறந்து போனபோது கூட நம்மால் FACEBOOKகிலும் இணைய தளத்திலும் வருத்தம் தெரிவிக்க முடிந்ததே தவிர நேரிடையாக  நமது துறை நண்பர்களின் குடும்பத்திற்கு உதவ முடியவில்லை.
 

மேற்கண்ட காரணங்களால் செவிலியர் நல அறகட்டளை என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்து உள்ளோம், தோழர் உமாபதி மற்றும் செவிலிய சகோதர சகோதரிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

 

செவிலியர் நல அறகட்டளை மூலம் திரப்படும் நிதி முழுக்கமுழுக்க செவிலியர் நலன் சார்ந்த விசயங்களுக்காக செலவழிக்கபடும்.

இதில் ஒளிவுமறைவு எதுவும் எதுவும் இன்றி அனைத்தும் வெளிபடையாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் அது சமந்தமான வழிமுறைகள் வரையறுக்கபட்டு முறையான அறிவிப்பு தெளிவாக விரைவில் தெரிவிக்கபடும்.

 
 


 

 

மேலும் கூட்டத்தில் மாநில துணைதலைவர் ரவி சீத்தாராமன், மாநில ஒருங்கிணைப்பாளர், மாநில பொருளாளர் திரு. சிலம்பு செல்வன், தென்மாவட்ட ஒருகினைப்பாளர் திரு.வசந்தகுமார், மாநில இணை செயலாளர் திருமதி. கலைசெல்வி, மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள்  கலந்து கொண்டு பணி நிரந்தரம் சமந்தமான மேற்கொள்ள பணிகள் குறித்தும், செவிலியர்களுக்கு உள்ள பிரச்சனைகள் குறித்தும் மேலும் அதற்கான தீர்வுகள், அதற்காக மேற்கொள்ளவேண்டிய காரியங்கள் குறித்து கூட்டத்தில் கலந்துரையாடபட்டு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.


தொகுப்பூதிய செவிலியர் வாழ்வுரிமை மீட்பு குழு:
கீழ்க்கண்ட கோரிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்து செல்ல ஒரு குழு நியமிக்கபட்டு உள்ளது.
 
அதில் திருமதி கலைச்செல்வி, 
தோழர் உமாபதி
தோழர் வசந்தகுமார்
 ஸ்ரீனிவாசன் 
அதில் முக்கிய மாநில நிர்வாகிகள். இவர்கள் இனி வரும் காலங்களில் களங்களில் தடைகளை தகர்த்தெறிந்து களசெயல்பாடுகளை மேற்கொள்ள உள்ளனர்.

 

 

 

கூட்டத்தின் முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றபட்டன.

 

 

 

1.    அரசு  மருத்துவமனைகளில் பணிபுரியும் 3000த்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

 

2. அனைத்து செவிலியர்களின் ஒப்பந்த அடிப்படை காலத்தை பணிக்காலத்துடன் இணைத்து வரன்முறை படுத்த வேண்டும்.

 

3.    அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய் சேய் நலம் காக்க ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆறு செவிலியர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும்.

 

4.    அரசு மருத்துவமனைகளில் தற்காலிக முறையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை பணியமர்த்துவதை கைவிட வேண்டும்.

 

5.    அனைத்து மருத்துவகல்லூரி மருத்துவமனைகளிலும் MCI விதிப்படி செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

 

கோரிக்கை அட்டை:

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 31-8-2015 முதல் 4-9-2015 வரை கோரிக்கை அட்டை அணிந்து  செவிலியர்கள் பணிக்கு செல்வர்.

 

அனைத்து செவிலியர்களும் மேற்கண்ட வாசங்கள் அடங்கிய பக்கத்தை பிரிண்ட் செய்து 5 நாட்கள் அணிந்து கொள்ளவும்.

 

 

தீர்வு காணப்படாத பட்சத்தில் அதன் பின்னர் சென்னையில் அனைத்து செவிலியர்களும் பணி நிரந்தரத்தை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான தேதி முடிவு செய்யப்பட்டு விரைவில் தெரிவிக்கபடும்.

 

அதனோடு உச்ச நீதி மன்றத்தில் MCI சமந்தமான பிரச்சனைகள் குறித்து தக்க ஆதாரங்களோடு பொதுநல வழக்கும் மற்றும் செவிலியர்கள் சார்பாக பணி நிரந்த்ரதிற்கான வழக்கும் தொடுக்கபடும்.

 

ஆனால் இந்த அளவுக்கு நமது செவிலியர்களை அலையவிடாமல் உண்மையில் கடந்த ஏழு ஆண்டுகளாக 3500 ரூபாய் சம்பளத்தில் பணியை ஆரம்பித்து தமிழக மக்களுக்கும் தமிழக அரசிற்கும் நற்பெயர் பெற்று தரும் வகையில் இரவுபகல் பாராமல் பணி புரிந்த நமது சகோதரிகளின் கண்ணீரை நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் துடைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

 

நாங்கள் அரசியல் கட்சி அல்ல ஆர்ப்பாட்டம் செய்வதற்கு, எதிர்கட்சி அல்ல ஏளனம் செய்வதற்கு, நாங்கள் அரசை மட்டுமே நம்பி உள்ள மக்களுக்கு சேவை செய்யும் சாமானிய அரசு ஊழியர்கள்.

 

எதிர்ப்பது எங்கள் நோக்கமல்ல எதிர்பார்ப்பு மட்டுமே

 

 

முயற்சிகள் தொடரும்.............................................................. விரைவில்


 

 
 
 
 
 
 
 

Thursday, August 27, 2015

தொகுப்பூதிய செவிலியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு ஆணைபணி மாறுதல் கலந்தாய்வு ஆணை:

கடந்த 4/8/2015 அன்று பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்ட தொகுப்பூதிய செவிலியர்களுக்கு முதல் கட்டமாக பணி மாறுதல் கலந்தாய்வில் தேர்தெடுத்த இடங்களுக்கான ஆணை அனுப்பபட்டு உள்ளது.

5 மற்றும் 6 தேதிகளில் கலந்து கொண்ட செவிலியர்களுக்கு வரும் வாரத்தில் ஆணை வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


திரு உமாபதி அவர்களின் திருமணம்


இணையம் மூலம் நம் அனைவரையும் இணைத்த திரு உமாபதி

            இணைகிறார் இருமனம் இணையும் திருமணத்தில்

இன்று இணையதளம் மூலம் செவிலியர்கள் அனைவரும் இணைந்து இருக்கிறோம் என்றால் அதற்கான முதல் விதையை விதைதவர் நமது தோழர் திரு உமாபதி அவர்கள்.


செவிலியர் நலனுக்காக எவ்வளவோ முயற்சிகளை முன்னின்று எடுத்து சென்ற பெருமை தோழர் உமாபதிக்கு உண்டு.


இன்று அதே இணையம் மூலம் அனைத்து செவிலியர்களும் அறிய தோழருக்கு வாழ்த்து தெரிவிப்பதில் பெருமையாக  உள்ளது.இன்று  தோழர் திரு உமாபதி அவர்களுக்கும் செவிலிய சகோதரி கலைச்செல்வி அவர்களுக்கும் திருமணம் எளிமையான முறையில் திருச்சி வயலூர் முருகன் கோவிலில் நடைபெற்றது.

 
விரைவில் வெகுவிமர்சையாக திருமண வரவேற்பு
நடைபெறஉள்ளது.
 
அனைத்து செவிலிய சகோதரசகோதரிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.
 
எல்லா வல்ல அந்த இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று சீரும்சிறப்புமாக வாழ எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டி அனைத்து செவிலியர்களும் வாழ்த்துகிறோம்..

Thursday, August 20, 2015

தமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலியநலச்சங்க கருத்தரங்கு (கூட்டம்)

தமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலிய நலசங்கத்தின் கூட்டம் வரும் 29-08-2015 (சனிகிழமை) அன்று திருச்சியில் உள்ள அருண் மேக்சி ஹாலில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலிய நலசங்கத்தின் கூட்டம்
நாள்:-29-08-2015(சனிகிழமை)

நேரம்:- 2-5 p.m.

இடம்:- அருண் மேக்சி ஹாலில் திருச்சி

கூட்டம் நடைபெறும் அன்று அனைவருக்கும் விடைதெரியாமல் கேள்விகுறியோடு இருக்கும் அனைத்து விஷயங்களுக்கும் 
கலந்தாலோசிக்கபட்டு சரியான உறுதியான முடிவுகள் எடுக்கபடும்.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் 2015 ஆம் ஆண்டை தவற விட்டால் கண்டிப்பான முறையில் 2017 ஆம் ஆண்டு தான். அதுவும் 2008 பேட்சிற்கே, எனவே 2009, மற்றும் 2010 பேட்ச் செவிலியர்கள் நிலை இன்னும் கேள்வி குறிதான்.

விரைவில் புதிதாக தொகுபூதியத்தில் காலியாக உள்ள பணி இடங்களுக்கும் புதிதாக தொகுபூதியத்தில் உருவாக்க பட்ட இடங்களுக்கும் (நிரந்த பணி இடங்கள் என்று நாம் நினைத்த இடத்தில கூட தொகுபூதியத்தில் செவிலியர்களை நியமிக்க இருப்பது போல் தெரிகிறது.

எனவே வரும் காலத்தில் அப்போது உள்ள நிலைமை என்ன, என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.
உதாரணமாக 2010 பேட்சில் படித்த பாதி செவிலியர்கள் உள்ளே மீதி பேர் வெளியே.
காலம் பலவற்றை மாற்றி விடும்.
இருக்கும் பொழுதே அதை ஒழுங்கான முறையில் பயன்படுத்தி வெற்றி பெறாவிட்டால் பின்பு வருத்தபட்டு செய்வதற்கு ஒன்றும் இல்லை.

அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் கண்டிப்பான முறையில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

தயவு செய்து அனைவரும் கலந்து கொள்ளவும்.
Tamilnadu Govt Contract Nurses Welfare Association's General Body meeting
Will be conducted on 29-08-2015 (Saturday)
place: Arun Maxi Hall, Trichy, near central bus stand.
Time: 2-5pm.

Important Resolution will be taken. Kindly attend all.

Pls forward to all.
Tuesday, August 11, 2015

தொகுப்பூதிய செவிலியர்களுக்கான கருத்தரங்கு (கூட்டம்)

இந்த மாத இறுதியில் தொகுப்பூதிய செவிலியர்களுக்கான கருத்தரங்கு நடைபெற உள்ளது.

இடம் தேதி நேரம் போன்றவை விரைவில் தெரிவிக்கபடும்.
தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.

ஒரு முடியாத பட்சத்தில் தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பில் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம்.
கருத்தரங்கில் செவிலிய துறையில் மேற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்கள், அதற்கான பணிகள், தொகுப்பூதிய
செவிலியர்களுக்கான தேவைகள் குறித்து அனைத்து தொகுப்பூதிய செவிலியர்கள் மத்தியில் கலந்தாலோசிக்க படும். அதற்கான தீர்வுகள் குறித்து முடிவெடுக்கபடும்.


புரியும் என நம்புகிறேன். வார்த்தைகளை மேலோட்டமாக தான் கையாள வேண்டியுள்ளது.

அனைவரும் வரவேண்டும் இல்லையென்றால் அனைவர்க்கும் வராது.

மற்ற அனைத்து விவரங்களும் விரைவில் தெளிவாக தெரிவிக்கபடும்.

அழுத பிள்ளைக்குதான் பால் கிடைக்கும் சில நேரம் அடியும் கிடைக்கும் ஆனால் அழுகாமல் இருந்தால் எதுவும் கிடைக்காது.

எனவே வலிகளை தாண்டி தான் வழிகளை தேடவேண்டிய சூழல்.

எனவே வலிகளை தாங்கி வழிகளை தேடலாம். 

Sunday, August 9, 2015

பணி மாறுதல் கலந்தாய்வு-தமிழக அரசிற்கு நன்றிதமிழ்நாடு முழுவதும் உள்ள தொகுப்பூதிய செவிலியர்கள் கடந்த 4, 5, 6 போன்ற தேதிகளில் நடைபெற்ற பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.

ஏழு வருடம் கழித்து நடைபெறும் இந்த பணி மாறுதல் கலந்தாய்வில் பெரும்பாலான தொகுப்பூதிய செவிலியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பணி மாறுதல் பெற்று கொண்டனர்.
 
கவுன்சிலிங் நேர்மையாக நடந்தா என்ற கேள்விக்கு ஒரு சிறு எடுத்துகாட்டு கூறினால் போதும் என நெனைக்கிறேன். மதுரை அரசு மருத்துவ கல்லுரி மருத்துமனை 9 இடங்கள் மேலூர் நான்கு இடங்கள், திருமங்கலம் அரசு மருத்துவமனை, போன்ற அதிக போட்டிஉள்ள இடங்களே கவுன்சலிங்கில் காட்டபட்டது. பெருமாபாலன சகோதரிகள் சிரித்த முகத்துடனே வெளியே வந்தது மனதிற்கு மகிழ்ச்சி.

இருப்பினும் சிலர் நினைத்த இடம் கிடைக்ககாமல் சிரமப்பட்டது மனதிற்கு வருத்தமாக இருந்தாலும் விரைவில் அதற்கும் எதாவது ஏற்பாடு செய்வோம்.

அதே இறுதிநாளன NCD கவுன்சலிங் அன்று PHASE I மாவட்டத்தில் உள்ள செவிலியர்கள் PHASE ii மாவட்டத்திற்கு பணி மாறுதல் பெற்று சென்ற போது ஏற்படும் PHASE I காலி பணி இடங்களை (RESULTANT VACANTS) மற்ற செவிலியர்களுக்கு அன்றே காண்பிக்குமாறு கோரிக்கை விடுத்தோம். கோரிக்கை ஏற்றுகொள்ளபட வில்லை அப்போது சில விரும்பதாகத நிகழ்வுகள நடைபெற்றது. அதே போல் அவற்றை காண்பிப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
 
ஒரு சில வருத்ததிற்குரிய நிகழ்வுகள் அன்றி கவுன்சிலிங் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது மிக சிறப்பாக நடைபெற்றது.
இதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், அவர்களின் தலைமையில் சிறப்பாக சுகாதார துறையை நடத்திவரும் மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்களுக்கும், மரியாதையைகுரிய உயர் அதிகாரிகளுக்கும் தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
 
ரெகுலர் எப்போ வரும்?????????????????????????
 
அதற்கான வழிகளை தேடி வலிகளோடு விரைவில் பயணங்களை தொடங்க உள்ளோம்.
 


வலிகளை பொறுத்து வழிதுணையாக வர தயாராக இருங்கள்.

Saturday, August 8, 2015

செக் மோசடியில் சிக்க வைக்கபட்ட தொகுப்பூதிய செவிலியர்: செவிலியர்கள் கவனம்


மதுரை அருகே உள்ள ஒரு மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழாம் வருடத்தில் தொகுபூதியத்தில் பணி புரியும் நமது சகோதரி ஒருவர், ஒரு செக்கை தனது கரங்களால் பூர்த்தி செய்ததன் காரணமாக இன்று பணி இன்றி சிரமப்பட்டு வருவதோடு, அவர்மேல் FIR காவல் துறையால் பதியபட்டு உள்ளது.


PHC யில் உள்ள அலுவலக கண்காணிப்பாளர் (office superintendent) ஆணைகிணங்க அவர் சொல்வதை ஒரு செக்கை பூர்த்தி செய்து உள்ளார், வழக்கமாக JSY செக் FILL UP செய்வது போல(ஏற்கனவே மருத்துவ அலுவலர் போல் கையொப்பம் இடப்பட்ட செக்)


ஆனால்  அலுவலக கண்காணிப்பாளர் மிகவும் திறமையாக அந்த செக் முழுவதையும் இந்த செவிலியரையே பூர்த்தி செய்ய வைத்து பின்னர் அந்த செக்கை வங்கியில் செலுத்தி பணத்தை பெற்று கொண்டு வா. வங்கியில் பணத்தை பெற்று கொண்ட பின்னர் AMOUNT RECEIVED  BY SUSILA என்று கையொப்பம் இட்டு பணத்தை பெற்று கொண்டு வா ஏனெனில் இந்த பணத்தை அந்த CHN இடம் தரவேண்டும் என்று கூறி உள்ளார்.


நமது செவிலிய சகோதரியும் பணத்தை பெற்று கொண்டு வந்து அலுவலக கண்காணிப்பாளரிடம் கொடுத்து விட்டார்.


ஒருமாதம் கழித்து மருத்துவஅலுவலர் ACCOUNT STATEMENT பார்க்கும் பொழுது பணம் TALLY ஆகாமல் உள்ளது. மேற்கொண்டு அவர் விசாரித்த போது அலுவலக கண்காணிப்பாளர் திறமையாக அந்த செக்கை காணவில்லை யாரோ திருடி உள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.


பின்னர் செக் எப்போது வங்கியில் செலுத்தபட்டது என்ற விவரம் VIDEO ஆதாரங்களை பார்க்கும் போது 

இந்த செவிலியர் வங்கியில் பணத்தை 
செலுத்தியதும், செக் முழுவதும் இந்த செவிலியரின் கையொப்பம் இருந்ததும் இந்த செவிலியரின் கண்ணீரையும், வாக்குமூலத்தையும் வீணாக்கி நிர்முலமாக்கியது.

தற்பொழுது கோர்டில் நிலுவையில் வழக்கு.

கையில் கைக்குழந்தை,

ஆதரவற்ற குடும்ப சூழல்.


இது சமந்தகமாக நமது துறை உயர்அதிகாரிகளின் உதவியை நாடினோம். அவர்களும் மனசாட்சிபடி செவிலியர் தவறு செய்யவில்லை  என்பதை ஏற்று கொண்டாலும் சட்டத்தின் பார்வையில் சாட்சிகளின் பார்வையில் குற்றவாளி யார்?

ஆனாலும் முடிந்த வரை உதவுவதாக கூறியுள்ளனர்.


ஒரு செக்கை எடுத்து மோசடி செய்யும் அளவுக்கு செவிலியர்கள் முன்னேற்றம் அடைந்து விடவில்லை என்பது அனைவர்க்கும் தெரியும். 

ஆனால் சூழ்நிலை கைதியாய் இன்று அந்த செவிலிய சகோதரி கண்களில் கண்ணீரோடு.

இருப்பினும் அந்த செவிலியரை கடைசிவரை உடன் இருந்து அவர்க்கு தேவையானதை நாம் செய்து கொடுப்போம் அதில் எந்த மாற்றமும் இல்லை. 

இருப்பினும் தற்போதைய சூழலில், அன்றாட குடும்ப செலவுகளுக்கே, குழந்தையை வளர்க்கவும் இந்த ஊதியத்திதை நம்பி இருந்த சூழலில்.

கண்களில் கண்ணீர் தான் வருகிறது நமக்கும், விட்டு விடமாட்டோம் இருப்பினும்  அந்த செவிலியரின் தற்போதைய நிலை, மனஉளைச்சல், அவற்றை எல்லாம் எவ்வாறு சரி செய்வது என்பதே புரிய வில்லை.